சிஏஏ சட்டத்தை ஒன்றிய அரசு 13 மாநிலங்களில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிஏஏ-விற்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிஏஏ சட்டத்தை ஒன்றிய அரசு 13 மாநிலங்களின் முதல்கட்டமாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தற்போது கரோனா தொற்றுப் பரவல் காலம் என்பதால் குறைந்த அளவிலான நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்தியுள்ளோம். பெருந்தொற்று காலம் என்பதால் மக்களைத் திரட்டிப் போராட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.
ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் முனைப்புக் காட்டினால் பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல் மக்களைத் திரட்டி பெரியளவில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்