தமிழ்நாட்டில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ள கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. கரோனா வைரசைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது சில தளர்வுகளுடன் தற்போதுவரை தொடர்கிறது.
அந்த வகையில் இன்று திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளிடம், காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் வசூலித்துவருகின்றனர். ஊரடங்கினை மக்கள் மீறுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 600 காவலர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, எப்போதும் பரபரப்புடன் காணப்படும், தாமிரபரணி ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், இ-பாஸ் பெற்று பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுவருகின்றன.
அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்திலும், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பால் விநியோகம், மருந்தகம், அவசர ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவையின்றி மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு செல்வோரிடமிருநது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.