சிட்டுக்குருவியை சுட்டிக்காட்டித்தான் சுறுசுறுப்பாக இயங்குபவர்களை 'சிட்டா பறக்குறாங்க' என்பார்கள். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிட்டாக பறந்தோரெல்லாம் கீச் கீச் கீதத்தை கிள்ளி எறிந்து விட்டு அலாரச் சத்தத்தால் அலறி எழுகின்றனர்.
நகரமயமாதல் என்னும் வலைக்குள் சிக்குண்டு தொலைந்து போன சிட்டக்குருவிகளை நாம் வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறோம். செல்போன் டவரின் கதீர்வீச்சால் சிட்டுக்குவிகள் காணாமல் போனது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் பலரும் அவற்றை மீட்க முயற்சி மட்டும் எடுக்க மறுக்கிறார்கள்.
குடிசைகளின் கம்புகள், ஓடுகளின் இடைவெளிகள், மாடங்கள், பரண்கள், மாடி வீட்டின் சிறு துளைகள் என கிடைக்கும் சிறு இடத்திலும் நிறைவாக வாழும் இந்தச் சிறு பறவைகளின் அடர்த்தியும் குறுகிபோனது. மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலிலும் இது விதிவிலக்கல்ல.
கொடைக்கானலில் 97 வகையான பறவை இனங்கள் இருந்தன. அவை வாழ கொடைக்கானல் வன உயிரின சரணலாயம், ஏற்ற இடமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அவை அழியும் தருவாயில் உள்ளன. சுற்றுச்சூழல் மாசுபாடு, நகரமயமாதல் இதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. மேலும் விவசாயத்திற்கு செயற்கை உரங்கள், மருந்துகள் பயன்படுத்துவதாலும் அவற்றை உண்ணும் குருவிகள் உடல் ரீதியாகவும் இனப்பெருக்க ரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றன.
இயற்கை சமநிலைக்கு சிட்டுக்குருவிகள் அத்தியாவசியம். சிட்டுக்குருவிகளின் ஆயுட்காலம் 13 ஆண்டுகள் என இருந்த நிலையில் தற்போது சரசாரியாக 4 அல்லது 5 ஆண்டுகளிலேயே அவற்றின் வாழ்க்கையை முடித்து விடுகிறது. ஒரு பருக்கை தானியம், ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் பறவைகளுக்காக இந்த கோடைகாலத்தில் கையளவு தானியம் குவளையவு நீரை மட்டும் ஒதுக்கி ஓரமாய் வையுங்கள்.
அவை பசி தீரட்டும். சிட்டுக்குவிகளை பாதுகாக்க அரசும் இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.
இந்தியாவின் பறவைகள் மனிதர் சலீம் அலி, "மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது" என்கிறார். அதனால் சிட்டுக்குவிகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல இவ்வுலகில் எந்த ஒரு உயிரினம் அழிந்தாலும் அது மனித இனம் அழிவதற்கான முதல்படி என்பதை நாம் நினைவில் கொள்வோம்.