திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வரக்கூடிய தண்ணீர், தங்கள் கிராமத்திற்கு வராததன் காரணமாக 12 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் பிரத்யேகமாக தொடர் நேரலை செய்தது.
குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், வீரக்கல், புதுப்பட்டி, சாமியார்பட்டி, கும்மம்பட்டி, பொன்மான் துறை, வக்கம்பட்டி, பழைய வக்கம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீரின்றி மக்கள் அவதியடைந்துவருகின்றனர்.
இதற்கு முக்கியக் காரணமாக உள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மூன்று அடி தடுப்புச்சுவரை குறைக்க வலியுறுத்தி 12 கிராம மக்கள் அனுமந்தராயன்கோட்டை கிராமத்தில் இரவு பகலாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைத்துத் தரப்பினரும் போராடினர்.
முதலிரண்டு நாள்களில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும் எந்தவித உடன்பாடும் எட்டாத நிலையில் ஆறாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
கிராம மக்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராஜவாய்க்கால் அணைக்கட்டில் நீர்க்கசிவை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட தடுப்பணையை நிரந்தரமாக அகற்றிவிடவும், பொதுப்பணித் துறை உயர் அலுவலர்களிடம் விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துக்கூறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுழற்சிமுறையில் ராஜவாய்க்கால் மூலம் ஆத்தூர் பகுதிகளுக்கு ஐந்து நாள்கள் நீர் வழங்குவது எனவும், அதன்பின்னர் ஐந்து நாள்களுக்கு காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக குடகனாற்றிக்கு தண்ணீர் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள், ஆத்தூர் அணைக்கட்டுகள் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள், குடகனாறு விவசாயிகள் இடையே பேச்சுவார்த்தை மூலம் கூட்டம் நடத்தி நிரந்தர நீர் பங்கீடு ஒப்பந்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறு நாள்களாக நடைபெற்ற கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்!