திண்டுக்கல்: மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் இணைந்து சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் என்னும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டிற்கும் குஜாராத்திற்கும் இடையிலான 100 ஆண்டுகள் கடந்த உறவு குறித்தும் தமிழ்நாட்டில் குடியேறிய சவுராஷ்டிரா மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் இரு மாநில மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை குஜராத்தின் பல பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே குஜராத் அமைச்சர்கள் தமிழ்நாட்டில் வாழும் சவுராஷ்டிரா மக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அமைச்சர்கள் நேரடியாக சென்று பங்கேற்றனர்.
சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் கலந்துகொண்டார். அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த விழாவில் குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் , பழங்குடியின மேம்பாட்டு துறை சசிவாலயா செயலாளர் முரளி கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களை திண்டுக்கல்லில் வாழும் சௌராஷ்ட்ரா மக்கள் கோலாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர். அதேபோல தஞ்சாவூரில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் குஜராத் அமைச்சர் குன்வர்ஜிபாய் பவாலியா கலந்து கொண்டார். மேலும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடந்த செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் விழாவுக்கு செளராஷ்டிரா சங்க மாநிலத் தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார்.
இதையும் படிங்க: வரும் 27ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை என்ன.?