திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பண்ணைக்காடு கிராமம். இங்கு விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இங்கு தேன்மொழி என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது கணவர் தண்டுவடப் பிரச்னையில் இறந்துவிட்டார். இவருக்கு ராம்குமார் (35) மற்றும் ஜீவா (31) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ராம்குமார், தன்னுடைய இரண்டு வயதில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையிலேயே வாழ்க்கையைக் கழித்து வருகிறார்.
மேலும் ஜீவா, தன்னுடைய தந்தையின் இறப்பிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். டிப்ளமோ இன் ஹார்ட்டிகல்ச்சர் படிப்பை முடித்த ஜீவா, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளார்.
இவ்வாறு மனதளவிலும் உடலளவிலும் செயலிழந்து வாழும் தன்னுடைய மகன்களை, வருமானம் ஏதும் இல்லாமல் ராம்குமாருக்கு அரசு உதவிப்பணமாக ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார், தேன்மொழி.
அதிலும் தற்போது ராம்குமாருக்கு வழங்க வேண்டிய மருந்துகள் அனைத்துமே விலை உயர்ந்ததாக இருப்பதால் அரசு மருத்துவமனையில் கிடைப்பதில்லை என்றும், பின்புலம் ஏதும் இல்லாமல் வறுமையில் தவித்து வரும் தங்களது குடும்பத்திற்கு உதவ அரசு முன் வர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார், தாய் தேன்மொழி.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சர்தான் எங்கள் குலசாமி.. ஆவடி சிறுமியின் பெற்றோர் உருக்கம்