திண்டுக்கல்: நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் விஷ்ணு (24). இவர், நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகேவுள்ள கசாப்புக் கடையில் வேலை பார்க்கும் முத்து (37) என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழியைக் கடித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முத்து, விஷ்ணு வளர்த்து வரும் நாயை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்பகை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை விஷ்ணு வீட்டுக்குச் சென்ற முத்து, விஷ்ணுவின் தாய் லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், தன் கோழியை கொன்றதற்காக ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதன்பின் வீட்டிற்கு வந்த விஷ்ணுவிடம் அவரது தாயார் முத்து வந்தது குறித்து தெரிவித்தார். பின்னர், இருவரும் முத்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு விஷ்ணுவுக்கும், முத்துவிற்குகும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முத்து தன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுவின் வயிற்றில் குத்தினார்.
இதனால் படுகாயமடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மகன் விஷ்ணு தனது கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடி துடிப்பதை பார்த்த அவரது தாய் கதறி துடித்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக விஷ்ணுவை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த விஷ்ணு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 25 பெண்களிடம் பாலியல் சீண்டல் - கைதான இளைஞர் வாக்குமூலம்