தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அமலில் உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு கரோனா பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களின் பணிகளைப் பாராட்டி அவர்களுக்கு வேட்டி, சேலை, நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட ஒன்றியப் பகுதிகளில் வசிக்கக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்களை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் 80 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் தற்போது 70-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் ஒரு சிலரே சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போதும் தகுந்த இடைவெளியுடன் செயல்பட்டு இந்தத் தொற்றை நமது பகுதியிலிருந்து விரட்டி அடிப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மக்களிடம் எப்போதும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கக் கூறும் அமைச்சர், தனது நிகழ்ச்சிகளில் அதனைக் கடைப்பிடிக்கத் தவறிவருகிறார்.
இது மக்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். இதற்கு முன்பாக நடந்த பல நிகழ்ச்சிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது சர்ச்சையானது இருந்தபோதிலும் இது தொடர்ந்துவருகிறது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு : சிறப்பு அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை