அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை, சேலம், தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
அதன்படி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஆகியோர் அன்னதானம் வழங்குகின்றனர். இந்நிலையில், பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 10 நிமிடங்களில் அனுமதி வழங்கப்படும். அதன்பின் ஒட்டன்சத்திரம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் மோகனரங்கத்திடம் உணவுப் பாதுகாப்பு உரிமப் பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அன்னதானம் வழங்கும் இடம், நேரம், குப்பைகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு, குடிநீர் ஆகியவை வழங்க வேண்டும். அன்னதானம் வழங்கும்போது நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. வாழை இலை, பாக்குமட்டை தட்டுகள், சில்வர் டம்ளர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி பெறாமல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.