திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாமல் வறண்ட சூழ்நிலையே நிலவியது. இதனிடையே பகலில் கடும் வெயில், நிலவிய சூழ்நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமான கடும் குளிர் நிலவி வருகிறது.
அதன்படி, இன்று (நவ.22) அதிகாலை மட்டும் குறைந்தபட்சமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 6.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால், கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட ஏரி பகுதிகளில் இருந்து மலைகளுக்கு நடுவே மெல்லப் படரும் பனிகள் பார்ப்பதற்கே ரம்மியமாகவும், மனதிற்கு அமைதியையும் அளிக்கின்றன.
இதனிடையே, கடும் குளிர் ஏற்பட்டு உள்ளதால் ஜிம் கானா உள்ளிட்டப் பகுதிகளில் லேசான உறைபனி காணப்பட்டது. மேலும், இதே வறண்ட வானிலை நிலவினால் விரைவில் உறைபனி வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கொடைக்கானலை நோக்கி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: பனிப்பொழிவை ரசிக்க விருப்பமா? பனிப்போர்வைக்குள் ஜம்மு-காஷ்மீர்