திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில், எப்போதும் விவசாயப்பணிகளுக்காகவும் கட்டடப்பணிகளுக்காகவும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், வில்பட்டி பிரதான சாலையில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 1) இரவு கொடைக்கானலில் இருந்து வில்பட்டி பகுதிக்குச் சென்ற மதுரையைச் சேர்ந்த டிப்பர் லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச்சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய ஏழு பேரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தின் காரணமாக, வில்பட்டி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் சென்ற வேன் விபத்து - 25 மாணவர்களுக்கு காயம்!