திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விலையும் மலை பூண்டுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் விவசாயக் குழுக்கள் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், தற்போது விவசாயக் குழுக்கள் அமைக்கப்பட்டு புவிசார் குறியீடு பெற்ற மலை பூண்டை இடைத்தரகர்கள் இல்லாமல் சந்தைப்படுத்த வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விவசாயிகள் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவின் மீது அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் உள்ளிட்ட அலுவலர்கள் குழு கொடைக்கானல் மேல்மலை ஆய்வுக்கு வந்தனர்.
தொடர்ந்து பூண்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் உள்ள கொடைக்கானல் மலை பூண்டு புகைப்போக்கி மற்றும் பதப்படுத்தும் கிடங்குகளை பார்வையிட்ட வள்ளலார் விவசாயிகளை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்டார்.
அப்போது விவசாயிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில், பூண்டு பயிரை மதிப்பு கூட்டும் விசயங்களுக்கு உட்படுத்தி சந்தைப்படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இப்பூண்டின் பெயரை முறையாக சந்தைப்படுத்த வத்தலக்குண்யில் மலைப்பூண்டு விற்பனைக்கு தனிச்சந்தை அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும், கொடைக்கானல் மலை பகுதிகளில் விளையும் காய்கறிகளுக்கான இயற்கை உரங்களை தயாரிக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.