திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் மலைப்பூண்டு, பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து செலவே பெரும்தொகையாக உள்ளது. மேலும் கிடங்கு போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் பூண்டை பாதுகாக்க இயலாத நிலை உருவாகிறது.
கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையங்களை அமைத்தால் அருகாமை மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். ஆகவே, நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாய சந்தைக் குழு செயலர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர், வருவாய்த் துறை வட்டாட்சியர் ஆகியோர் பூண்டு கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மார்ச் 15ஆம் தேதிக்குள் தேர்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி கருக்கலைப்பு செய்யலாமா - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?