இலங்கையில் வழிபாட்டுத் தலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக பழனி மலைக்கோயில் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படி பாதை, ரோப் கார், மின் இழுவை, ரயில், மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் மற்றும் டிடக்டர் கருவிகள் உதவியுடன் பக்தர்கள் கொண்டு வரும் பைகள் பொருட்கள் ஆகியவைகளை தீவிர பரிசோதனை செய்த பின்பு மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பாதுகாப்பு 24 மணி நேரமும் இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் காவல் துறையின் பாதுப்பு குறித்து கோயிலில் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உயர்மட்டக் குழு காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த் தலைமையில் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில் காலை, மாலை நேரங்களில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளார்களா? பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக காவலர்கள் தேவைப்படுகிறதா? என இந்தக் குழு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையானது முதலமைச்சருக்கு அளிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.