திண்டுக்கல்: நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு 7ஆம் வகுப்பு மாணவர்கள். இவர்களுடன் 4ஆம் வகுப்பு பயிலும் மாணவனும் நண்பராக பழகி வந்தான். இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வார்கள், ஒன்றாக விளையாடுவார்கள்.
இந்த மாணவர்கள் மூன்று பேரும், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். ஆனால், மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள், பள்ளிக்குச்சென்று மற்ற மாணவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் காலையில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவர்கள் வெளியில் எங்கும் சென்று விட்டார்களா? அல்லது மாணவர்களை யாராவது கடத்திச்சென்று விட்டார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், நிலக்கோட்டை காவல் துறையினர் 12 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து செம்பட்டி, வத்தலக்குண்டு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையில் விடிய விடிய தேடியதில் அந்த மாணவர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களிடம் அன்னதானம் வாங்கி சாப்பிட்டு விட்டு, பக்கத்து ஊர் சாலையோர மடத்தில் இரவு முழுவதும் தூங்கியுள்ளனர்.
வயிறுமுட்ட உண்டு இரவு முழுவதும் நன்றாக அயர்ந்து தூங்கிய மாணவர்களைக் கண்ட காவல் துறையினர் தலையிலடித்துக்கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி அன்னதானத்தை சாப்பிட்டு தூங்கி, சுற்றித் திரிந்த மாணவர்களை 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் விடிய விடிய தேடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கணவர் இறப்பு பற்றி கேட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிப்பு.. போலீசார் விசாரணை..