திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டு தினத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் 17 நாள்களில் உண்டியல்கள் அனைத்தும் நிரம்பின.
இதனையடுத்து ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இரண்டு நாள்கள் எண்ணிக்கையில் மொத்த காணிக்கை வரவாக 4 கோடியே 33 இலட்சத்து 56 ஆயிரத்து 610 ரூபாய் கிடைத்துள்ளது.
மேலும் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு, வெள்ளியால் ஆன காவடி, வீடு, தொட்டில், வேல், கொலுசு உள்ளிட்டவைகளையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில் தங்கம் ஆயிரத்து 121 கிராம், வெள்ளி 17 ஆயிரத்து 736 கிராமும் கிடைத்துள்ளன.
அதுமட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 192 நோட்டுகளும் கிடைத்துள்ளன.
உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், மதுரை அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் பொன் சுவாமிநாதன், திண்டுக்கல் மண்டல உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'எலி போல மனிதர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்துவது கண்டிக்கத்தக்கது'