திண்டுக்கல்: மதுரை கே.புத்தூரைச் சேர்ந்தவர் ராஜன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது வறுமைப் போக்கச் சாலையோரங்களில் செல்போன் பேக் கவர்களை விற்பனை செய்து வருகிறார். தற்போது பழனியில் ஐஎஃப்எஸ் சீசன் தொடங்கியுள்ளதால் பழனி நகர் காவல் நிலையம் அருகில் சாலையோரத்தில் செல்போன் கவர்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவரை, பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வரும் சுதர்சன் என்பவர் வியாபார போட்டி காரணமாக தாக்கியுள்ளார். மேலும், ‘50 ரூபாய்க்கு செல்போன் கவரை நீ விற்பனை செய்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது’ என கேட்டு மிரட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். தொடர்ந்து, ‘பழனியில் இனி வியாபாரம் செய்தால் நீ இருக்கமாட்டாய்’ என கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த செல்போன் கடைக்காரர் வீடியோ எடுத்து, வாட்சப் குழுவில் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து சாலையோர வியாபாரி ராஜனிடம் கேட்டபோது, “மதுரையில் மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்து வருகிறேன். வேலை கேட்டுச் சென்றாள் யாரும் வேலை கொடுக்காத நிலையில் வேறு வழியின்றி குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக செல்போன் கவர் வாங்கி விற்பனை செய்து வருகிறேன்.
ஆனால், செல்போன் கவர்களை விற்பனை செய்யக்கூடாது எனக்கூறி ஒருவர் என்னை மிரட்டி அடித்தார். என்னை யாரும் காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை. வேறு வழியின்றி வாங்கிய செல்போன் கவர்களை விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று அதே இடத்தில் நடந்துகொண்டே விற்பனை செய்து வருகிறேன். இருந்தபோதிலும், பல கடைக்காரர்கள் வந்து என்னை விரட்டுகின்றனர்” என வேதனை தெரிவிக்கிறார்.
பழனி முருகனை நம்பி வெளியூர், உள்ளூர் என வித்தியாசமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பெரும் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், கை வியாபாரிகள் மற்றும் வடநாட்டு வியாபாரிகள் என அனைவரும் பிழைக்கும் போது, குடும்ப வறுமை காரணமாக சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் ஏழை வியாபாரியைக் கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் கடைக்காரர்கள் பிடித்து அடிப்பதும் மிரட்டுவதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உழைத்து பிழைக்க நபரை உழைக்கக் கூடாது எனக்கூறி அடிப்பதும், அதற்கு சில கடைக்காரர்கள் ஆதரவாக இருந்து மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூரில் மீண்டும் புதிய கல்குவாரி எதற்கு? சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்