திண்டுக்கல் அருகே சிறுமலையை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (45). இவரது உறவினர் கருப்பையா (46). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அகஸ்தியர் புரம் - தென்மலை ரோட்டில் உள்ளது. இவர்களது இடத்திற்கு அருகில் விவசாயம் செய்து வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனபால் என்பவருக்கும் இவர்களுக்கும் இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இந்த இடப்பிரச்சினை சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச். 2) தனபால் மற்றும் அவரது உறவினர்கள் சிறுமலைக்கு வந்து ராஜாக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார்.
இதனை தடுக்க வந்த கருப்பையா மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அவர்கள் 2 பேரும் அங்கேயே சுருண்டு விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததும் தனபால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ராஜாக்கண்ணு, கருப்பையா இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பேசியது சர்சையை கிளப்பியிருந்தது.
திருச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் ஆட்டின் மீது வாகனத்தால் மோதிவிட்டு, ஆட்டின் உரிமையாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இரட்டைக் குழல் துப்பாக்கியால் இருவரை சுட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதமாக இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பவர்கல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கேஸ் குடு பாத்துக்கலாம்.! துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்