திண்டுக்கல்: பழனி மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அதிகாரிகள் அகற்றிய நிலையில், கடைகளை அகற்ற வேண்டாம் என கடைக்காரர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கோயில் செக்யூரிட்டிக்கும், கடைக்காரருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இதனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பெயரில், அவ்வப்போது ஆக்கிரமிப்புக் கடைகளை கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் அகற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஜன.05) மலை அடிவாரத்தில் குடமுழுக்கு அரங்கம் முன்பு ஆக்கிரமிப்புக் கடைகளை கோயில் அதிகாரிகள் அகற்றி வந்துள்ளனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண் வியாபாரிகள், கண்ணீர் விட்டு அழுது கடைகளை அகற்ற வேண்டாம் எனக் கேட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புக் கடைக்காரர்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரயிலில் வாலிபரை கத்தியால் குத்திய சமோசா வியாபாரி முதல் 3 பேர் கைது வரை - சென்னை குற்ற செய்திகள்!
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த போலீசார் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி, பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து, தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி, மலையடிவாரத்தில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கடைக்காரர்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறுவதாகவும், பக்தர்களுக்கு இடையூறாகக் கடைகள் அமைக்கக் கூடாது எனவும், கோயில் அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்ததால் மலை அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தருமபுரி அருகே நில அளவீடு பிரச்சனையில் போலீஸ் மீது சாணத்தை ஊற்றிய பெண் கைது!