திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் 1ஆவது தெருவில் உள்ள ராஜா முகமது என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகமாக, கடந்த 2018 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்ட நிலையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் சரிவர வாடகை தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கும் காங்கிரஸ் நிர்வாகி துரை மணிகண்டனுக்கும் இடையே கடந்த அக்.13 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், வீட்டில் மாந்திரீகம் செய்து பசுமாட்டை வீட்டில் புதைத்துள்ளதைப்போல், உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது, வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது புகார் அளித்தார். புகாரின் பேரில் மிருக வதைத் தடை சட்டம், மிருகங்களைக் கொன்று புதைப்பது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (அக்.15) திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையில், கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு முன்னிலையில் காவல் துறையினர், ஜேசிபி இயந்திரம் மூலம் மாடு புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர்.
அப்போது அங்கு மாட்டின் எலும்பு மற்றும் சதைப்பகுதிகள் உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்து. தொடர்ந்து, அவற்றை ஆய்வுக்காக கால்நடை மருத்துவர் குழு இன்று (அக்.15) எடுத்துச் சென்றனர். மருத்துவர்கள் வழங்கக்கூடிய அறிக்கையை தொடர்ந்து, அங்கு புதைக்கப்பட்டது காளை மாடா? அல்லது பசுமாடா? என்பது தெரியவரும்.
இதனிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் தரப்பில் அவரது கார் ஓட்டுநர் சுப்பிரமணி என்பவர் ஜல்லிக்கட்டு கன்று குட்டி ஒன்றை வளர்த்து வந்ததும்; அக்கன்று குட்டிக்கு ஒரு வயது உடைய நிலையில் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதை அப்பகுதியில் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்தப் பிறகே புதைத்ததாகவும் கூறினார்.
எனினும் காவல் துறையினரிட்ன் முழு விசாரணை மற்றும் மருத்துவக் குழுவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக கிடைத்த பிறகுதான் மாந்திரீகம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா? அல்லது இயற்கை மரணம் எய்தப் பின் புதைக்கப்பட்டதா? என்பன குறித்து உண்மை தெரியவரும்.
இதையும் படிங்க: வீட்டில் பசு மாட்டை கொன்று புதைத்து பூஜை செய்த காங்கிரஸ் பிரமுகர்? - வீட்டு உரிமையாளர் புகார்