திண்டுக்கல்: குஜிலியம்பாறை தாலுகா, தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்குமாருக்கு, கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், 'ஒரு பெண் தன் கணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புகார் அளித்துள்ளதால், அவரின் கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள்' என்று அழைப்புவிடுத்தார்.
இதனால் காலை 11:30 மணிக்கு சென்று, தற்கொலை நடந்ததாக சொல்லப்பட்ட கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மறுபக்கம் நவீன கேமராவை கிணற்றுக்குள் இறக்கி உடல் எங்கு கிடைக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தனர்.
கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தேடப்பட்டு வந்த ராஜாமணி என்பவரின் மனைவி சித்ரா, அவரது உறவினர்களுக்கு கணவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த அவரது உறவினர்கள், அனைவருக்கும் ராஜாமணி இறந்துவிட்டார் என்று தகவல் தெரிவித்து வீட்டின் முன்பாக பந்தல் போட்டு, மைக் செட் கட்டி, ட்ரம் செட்காரர்களை வரவழைத்து உடல் கிடைத்ததும் இறுதிச்சடங்கு செய்ய தயார் நிலையில் காத்திருந்தனர்.
திடீர் ட்விஸ்ட்: தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்குமார், தலைமையிலான வீரர்கள் மதியம் மூன்று முப்பது மணி வரையில் தேடியும் ராஜாமணியின் உடலை கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்பொழுது அங்கு வந்த ஒருவர், தீயணைப்புப் படையினரிடம் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் செம போதையில் தோட்டத்துக்குள் படுத்து இருக்கிறார் என்று தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாலவிடுதி காவல்துறையினர் மற்றும் குஜிலியம்பாறை தீயணைப்புத்துறையினர் சென்று பார்த்த பொழுது, அவர் அங்கே செம போதையில் ஹாயாக படுத்திருந்தார். இதனையடுத்து அவரை மீட்டு அவரது மனைவியிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். அப்போதுதான் அவரது மனைவி சித்ராவுக்கு, கணவர் ராஜாமணி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் புரிந்தது.
குடிபோதையில் ராஜாமணி செய்த செயலால் அவரது உறவினர்கள் அலைக்கழிக்கப்பட்டதுடன் காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரும் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே 3 மணிநேரம் போராடி வழுக்குமரத்தில் ஏறிய நபர்