திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே இல்லம் தேடி கல்வி தன்னார்வலரை தனிப்பட்ட பிரச்னைகளைக் கூறி அனைவர் முன்பும் ஆங்கில ஆசிரியர் திட்டியதைக் கண்டித்து உறவினர்கள் பள்ளியின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக இல்லம் தேடி கல்வியில் பணியாற்றுபவர்களுக்கு பள்ளியின் நிர்வாகக் குழு சார்பாக கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்த்தி என்ற பெண்ணிடம் அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியர் கோபிநாதன் என்பவர், தனிப்பட்ட பிரச்னைகளைக் கூறி அனைவரின் முன்பாக, மரியாதை குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆர்த்தி அவருடைய கணவர் கார்த்தி மற்றும் அவருடைய உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று பள்ளியை முற்றுகையிட்ட ஆர்த்தியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர், தலைமையாசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியரான கோபிநாதன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பூத்தாம்பட்டியில் சாலையின் ஓரமாக ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் மற்றும் பேருந்து நிழல் கூடை அமைக்கும் பணிகள் தொடங்கப்போவதாக கூறப்பட்டது. அதனால், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அனைவரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் ஆங்கில ஆசிரியர் கோபிநாதன் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தொடர்ந்து பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து மேலதிகாரிகளுக்கு இது தொடர்பான புகார் அளித்துள்ளனர்.
இதனை அறிந்து கோபமடைந்த கோபிநாதன், கார்த்திக்கின் மனைவி ஆர்த்தி என்பவரை அனைவர் முன்பாகவும் மரியாதை குறைவாகப் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று பள்ளியின் முன்பாக திரண்ட 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.