திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொல்லபட்டியில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடை, தற்போது ஊரடங்கில் மூடப்பட்டு, கடையிலிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து, பூட்டப்பட்டு, அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தக்கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் பாலகுரு என்பவர் தனது வீட்டில் ஏற்கெனவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த மதுபாட்டில்களைக் கொண்டு வந்து, பூட்டிய மதுபானக் கடையை இரவு நேரத்தில் சட்ட விரோதமாக திறந்து மதுபானம் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்றனர். அப்போது, காவல் துறையினர் வருவதை அறிந்த பாலகுரு கடையைப் பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், ஜன்னல் வழியாக காவல் துறையினர் பார்த்த போது 250-ற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அனைத்து மதுபாட்டில்களையும் கைப்பற்றி தனியார் மண்டபத்திற்குக் கொண்டு சென்று, அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள மதுபானக் கடை மேற்பார்வையாளர் பாலகுருவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!