திண்டுக்கல்: கொடைக்கானலில், அதிமுகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில் அவர் கூறியதாவது, 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு. இதனைமீறி, மறு தேர்தல் வருமென எடப்பாடி பழனிசாமி கூறிவருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.
'அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும்'
அதிமுகவின் கொடி, கட்சி எல்லாம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் பாதுகாக்கப்பட்டது. இவை பாமக, பாஜக ஏறி மேலே செல்ல உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. இந்தக் கொடியை சிலர் பிடிக்க வேண்டாம்.
ஓபிஎஸ்-ஐ அரசியலிலிருந்து ஓரம்கட்டி வைத்துவிட்டனர். சசிகலாவுடன் எந்த நேரத்திலும் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்.
கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இந்த அரசு கைது செய்யாமல் இருக்கிறது. கைது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சந்தேகம் தீரும்.
'அதிமுக உருப்படாது'
ஊரக உள்ளாட்சித் தேர்தலில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் புறக்கணிக்கப்படுவதால், அவர்களில் சிலர் திமுகவில் இணைய காத்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரைக்குச் செல்லாமல் இருந்தால், ஓரிரு இடங்களில் ஆவது வெற்றி பெறலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சரியாக தூங்குவது இல்லை. எப்போது காவல் துறை வரும். எப்போது கைது செய்வார்கள் என்ற கலக்கத்தில் இருந்து வருகிறார்கள். ஆகவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக உருப்படாது. ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது' என்றார்.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்ச்சி - கௌரவித்த அமைச்சர்