திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி பாலமரத்துப்பட்டியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்கள் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக பாலமரத்துப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி ரேஷன் கடைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாலமரத்துப்பட்டியில் பகுதி நேர நியாய விலை கடையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், இதில் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் கூறியதை அறிந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அஜாய்கோஸ் தலைமையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.