திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அரசியல்,பிற அமைப்புகளால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்பட 5 நபர்களுக்கு மேல் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மக்கள் பொது நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கலந்துகொள்வதால் கரோனா சமூக தொற்றாக மாறி மாவட்டம் முழுவதிலும் நோய்த் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வாகனங்களில் பயணிப்போர், தகுந்த இடைவெளியின்றி பயணம் செய்வதால், உடன் பயணிக்கும் பொதுமக்களுக்கும் கரோனா தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் களப்பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பிற துறை அலுவலர்களுக்கும் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் கரோனா நோய் தொற்று சமூக தொற்றாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் பொதுமக்களின் நலன் கருதி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இது போன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலும், கரோனா வைரஸ் பரவல் இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தை பாதுகாக்கும் பொருட்டாக பொதுமக்கள் அனைவரும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.