திண்டுக்கல்: கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலை மூலம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகப் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் பட்டாசு விற்பனை அமோகமாகத் தொடங்கியது.
இந்நிலையில் வழக்கத்தை விட கூடுதலான விலைக்குப் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விற்கப்பட்ட பட்டாசுகளுக்கு முறையாக பில் போடாமலும், துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துப் பல லட்சம் ரூபாய்க்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலை மூலம் சுமார் 6 லட்சம் ரூபாய் அளவிற்குப் பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட அளவைவிடப் பல மடங்கு கூடுதலான பட்டாசு இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூடுதல் விலைக்குப் பட்டாசு விற்பனை செய்வதுடன் அதற்கு உரிய பில் போடாமலும் விற்பனையாளர்கள் விற்பதால் பொதுமக்களுக்கும் கூட்டுறவு பண்டகசாலை பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பில் போட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் தெரிவித்தார்.
மேலும், கடையில் ஆய்வு மேற்கொண்ட போது தரமற்ற பட்டாசுகளும் மற்றும் தனி நபர் ஒருவர் மொத்தமாக வாங்கி கொடுத்த பட்டாசுகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
எனவே, கூட்டுறவு பண்டகசாலையில் விற்கப்படும் பட்டாசுகளில் முறைகேடு நடந்திருப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.