திண்டுக்கல் மாவட்டத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிஐடியு தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் மோகனா கூறுகையில், "சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையிலும் பாலின பாகுபாடு காரணமாக பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஒரே பணியை செய்திடும் பெண் ஊழியர்களுக்கு ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் விதமாக 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பணியிடங்களில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு இருந்து வருகிறது. இதனைத் தடுக்க தனியார் பொதுத்துறை நிறுவனங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். சமீப காலமாக குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்த வண்ணமே உள்ளன.
தொடர்ந்து அதிகாரம் படைத்தவர்கள் பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஆதிக்கத்தை செலுத்தி அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். இதனைக் களைவதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த மகளிர் தினம் என்பது பெண்கள் தங்கள் உரிமையை பெறுவதற்கு நினைவுறுத்தும் நாளாக அமைந்துள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: மதக் கலவரத்தைத் தூண்டி விடும் ஸ்டாலின் - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு