தமிழ்நாடு பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் பழனிக்கு வருகை தந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்து பல நாட்கள் ஆகியும் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக மின்வெட்டு பிரச்னை, மின்கட்டண உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது.
கரோனாவை காரணம் காட்டி முறையான மின்கணக்கீடு இல்லாததால் கடந்த காலத்தில் செலுத்திய கட்டணத்தைவிட தற்போது பலமடங்கு உயர்த்தி கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த ஆண்டு 1000 ரூபாய் செலுத்தியிருக்கலாம் இந்த ஆண்டு 4 ஆயிரம் ரூபாய்வரை கட்டும் அளவுக்கு மின்கட்டணத்தில் குளறுபடிகள் உள்ளன. இவற்றை உடனடியாக சரிசெய்ய அரசு முன்வர வேண்டும். இல்லையேல் தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
முக்கிய பிரமுகர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற அவைக்கூட்டம் நடக்கக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் அறிவிக்கப்படாத நிலையை உருவாக்கி மக்களுக்கு நல்லதிட்டங்கள் எதுவும் போய் சேரக்கூடாது என்ற உள்நோக்கமே காரணம்” என்றார்.