திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு நாள்தோறும் பத்திற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் மதுரை சென்று வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, அசுர வேகத்தில் அரசுப் பேருந்தை முந்திச் சென்றபோது, அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் அருகே அந்த பேருந்தை நிறுத்திய அம்மையநாயக்கனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குமரேசன், பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை கடுமையாக எச்சரித்தார்.
இதுமட்டுமல்லாது, பேருந்துக்குள் அமர்ந்திருந்த பயணிகளிடம் சென்று, அதில் அசுர வேகத்தில் தனியார் பேருந்தை ஓட்டிச் சென்றால் பயணிகள், நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் முறையிட்டு பேருந்தை நிறுத்தச் சொல்ல வேண்டும் என்றும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், இது போன்று பேருந்துகளை வேகமாக இயக்கினால், பயணிகள் 100 என்ற காவல் துறை அவசர எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் எனவும் காவல் ஆய்வாளர் குமரேசன் அறிவுறுத்தினார். இதனை அடுத்து தனியார் பேருந்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்து, மிதமான வேகத்தில் ஓட்டிச் செல்லுமாறு கண்டித்தார்.
இதையும் படிங்க: இண்டிகோ விமான சாண்ட்விச்சில் புழு.. அதிர்ந்த பயணி!