கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் பலனாக கடந்த சில நாள்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேலும் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை மாவட்ட எல்லைப் பகுதியான பள்ளப்பட்டி சோதனைச் சாவடியில் காவல் துறையினர் மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களைச் சோதனை செய்து, அனுமதியின்றி வரும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் ஒரு ஷிஃப்டுக்கு 10 காவலர்கள் வீதம் மூன்று ஷிஃப்ட்டுகள் பிரிக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.