திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டாஸ்மாக் பாரில் சோதனைக்கு சென்ற மதுவிலக்கு தலைமைக் காவலரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள், சிசிடிவி உதவியுடன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், ஆத்துமேடு கரூர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை (3225) அருகே ஒரு பார் உள்ளது. திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.15) அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக யாரும் மது விற்கிறார்களா என ஆய்வு செய்ய வேடச்சந்தூர் மற்றும் கூம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மதுவிலக்கு தலைமைக் காவலராகப் பணி செய்துவரும் கருதனம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த 15-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் காவலரை தாக்கியுள்ளனர். இதனால் பலந்த காயமடைந்த மதுவிலக்கு தலைமைக் காவலருக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், காவலரை தாக்கியவர்கள் கருக்காம்பட்டி மற்றும் சுற்று பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.