திண்டுக்கல்: தமிழ்நாட்டின் வனப்பரப்பு தற்போது 22.71 சதவீதம் உள்ளது. இதனை அடுத்த பத்து ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை சார்பில் 10,000 குறுங்காடுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை தவிர்க்கவும் ஜப்பான் சுற்றுச்சூழல் ஆர்வலர் அறிமுகப்படுத்திய ‘மியாவாக்கி காடுகள்’ எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கி திண்டுக்கல் மாவட்டம் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரி வளாகம், பொன்னிமாந்துரை பகுதியில் குறுங்காடுகள் வளர்க்கப்பட்டுள்ளது.
குறுகிய இடத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடுவதன் மூலம் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட இடையகோட்டை கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம், சீமைகருவேல மரங்களால் புதர் மண்டி காணப்பட்டது.
இந்த இடத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏவும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி தேர்வு செய்தார். இதனையடுத்து 117 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்யும் பணி முடிவடைந்தது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக மரக்கன்றுகளை நடுவதற்கு குழி தோண்டும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே இதை ஏன் சாதனை முயற்சியாக மாற்றக்கூடாது என்ற எண்ணம் தோன்றவே, சாதனை முயற்சியாக ஆறு மணி நேரத்தில் ஆறு லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த சாதனை நிகழ்ச்சியை டிசம்பர் 23ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதேநேரம் திண்டுக்கல் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் பிரபு, பழநி கோட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இணைந்து சாதனை முயற்சிக்கான பணிகளை தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் ஆறு மணி நேரத்தில் ஆறு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஒரு மரக்கன்று நடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என கணக்கிடப்பட்டது. இதில் பங்கேற்ற 25 தன்னார்வலர்கள், ஒரு மணி நேரத்தில் 2,500 மரக்கன்றுகளை நட்டனர். இதன் அடிப்படையில், ஆறு லட்சம் மரக்கன்றுகளை ஆறு மணிநேரத்தில் நடுவதற்கு தேவையான ஆட்களை தயார் நிலையில் வைத்து ஒரே நேரத்தில் மரக்கன்றுகளை நட்டு சாதனை புரிய திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிலுவைப் பூக்கள்!