கொடைக்கானல் நகரில் உள்ள காவல் நிலையம், காவலர் குடியிருப்புகள், மகளிர் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தையும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி நேரில் பார்வையிட்டார். அவருடன் டிஎஸ்பி ஆத்மநாதன், ஆய்வாளர் ராஜசேகர் உள்பட காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி, 'கொடைக்கானல் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாக கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல பூம்பாறை கிராமத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பணியில் உள்ள காவலர்களுக்கு குடியிருப்பு வசதி குறைவாக உள்ளது. மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மலைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து ஆய்வாளர் பதவி நியமிக்க ஏற்பாடு செய்ய திட்டமிட்டுளோம்' என்று கூறினார்.
இதையும் படிங்க: போலீஸ் வாகனத்தில் டிக் டாக் செய்த சிறுவர்கள் - காவல்துறை அளித்த வினோத தண்டனை!