திண்டுக்கல்லில் பி.ஆர்.என்.பி. பள்ளி குழுமம் சார்பில் கல்வி விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெற்றன. இதையொட்டி குள்ளனம்பட்டி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் கல்வி சார்ந்த போட்டிகளான திருக்குறள், பொது அறிவு, கல்வி ஸ்லோகன் (கருப்பொருள்) போன்றவை நடத்தப்பட்டன.
இது குறித்து பள்ளி செய்தித் தொடர்பு அலுவலர் அருண்ஜெரால்டு கூறியதாவது:
கரோனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால் படிப்பில் கவனம் சிதறியுள்ளது. அதை மேம்படுத்தும்விதமாக இந்தப் போட்டியை நடத்துகிறோம்.
மேலும் வீட்டில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக இந்தக் கல்வி விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொண்டனர். இதில் 20 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 10 பொது அறிவு வினாக்களுக்கு பதில் அளிப்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், சிறந்த கல்வி கருப்பொருள் கூறுபவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலும் பரிசாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர்.என்.பி. பள்ளி தாளாளர் சந்திரசேகர் செய்திருந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலக்கூறுக்கு நிலையான மாற்றைக் கண்டறிந்த சென்னை ஐஐடி