திண்டுக்கல்: கொடைக்கானல் - பழனி சாலையில் அமைந்துள்ளது வட கவுஞ்சி என்ற மலை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், தங்களது கிராமப் பகுதிகளை ஒட்டியுள்ள மலை கோவில்களுக்கு செல்வதற்கும், விவசாய நிலங்களில் வேலி அமைத்துக் கொள்வதற்கும் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அத்துடன் கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாகவும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவற்றை கண்டித்து வட கவுஞ்சி பிரிவு அருகே பஸ் மறியல் போராட்டம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இதனைத் தடுத்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள ஆர்டிஓ அலுவலகம் வருவதற்கு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையினர் அழைத்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி, வனத்துறை சரகர்கள் உள்ளிட்டோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, கிராம மக்களை தரக்குறைவாக நடத்தும் வன ஊழியர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் உள்ளிட்டவைகளை எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அமைதி பேச்சு வார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.
விவசாயிகளும் வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பு வெளிவந்த பின்னர் இந்த பகுதியில் உள்ள 16 கிராமங்களின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.