ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் தேவைக்காக அத்தியாவசிய பொருள்களான பால், மளிகை பொருள்கள், மருந்துகள் மற்றும் காய்கறி ஆகியவை மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வெளியிடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றுவரை 77 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், கரோனா குறித்த அச்சமின்றி, மக்கள் காலை முதலே இயல்பு வாழ்க்கை நடப்பது போன்று அத்தியாவசிய பொருள்கள் வாங்க கூட்டமாக சென்று வந்தனர்.
மேலும் செல்ஃபோன் ரீசார்ஜ் செய்வது, ஆட்டோ ஸ்பேர்ஸ் கடைகளில் பொருள்கள் வாங்குவது என கூட்டம் கூட்டமாக வீதிகளில் வலம் வருகின்றனர்.
இதனால் கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுமக்கள் கட்டுப்பாடுகளை மீறி காலை நேரங்களில் இயல்பாக வலம் வருவது அனைவரையும் அச்சமடையச் செய்கிறது.
இது போன்ற சூழலில் தாமாகவே தனிமைப்படுத்தலையும், தகுந்த இடைவெளியையும் பின்பற்றினால்தான் கரோனாவில் இருந்து மீள முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: பணிக்குத் திரும்பிய நிறைமாத கர்ப்பிணி