திண்டுக்கல்: பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கழிவறைத் தொட்டிகள் அமைக்கப்பட்ட கழிவறைகளே அதிகளவில் உள்ளன. அந்தக் கழிவறைத் தொட்டிகளில் மனிதக் கழிவுகள் நிறைந்தால் செப்டிக் டேங்க் பொருத்தப்பட்ட லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்றன.
மனிதக் கழிவுகளை உரப்பயன்பாட்டிற்காகத் தேவைப்படும் விவசாய நிலங்களில் விவசாயிகளின் அனுமதியுடன் கொட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அவ்வாறு செய்யாமல் விதிகளை மீறி பழனி புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையோரங்களிலும், அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதாகப் புகார் எழுந்தது.
கழிவுகள் கொட்டப்படுவதாகப் புகார்
குறிப்பாக பழனி புறவழிச்சாலையில் அதிகளவில் கொட்டப்படும் மனிதக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 10) அதிகாலை முதல் பழனி சார் ஆட்சியர் சிவக்குமார் கொடைக்கானல் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பழனி புறவழிச்சாலையில் செப்டிக் டேங்க் லாரி ஒன்று செல்வதைப் பார்த்து அந்த வாகனத்தை சார் ஆட்சியர் சிவக்குமார் பின்தொடர்ந்து சென்றார். தேவஸ்தான பூங்கா அருகே உள்ள விவசாய நிலத்தில் மனிதக் கழிவுகளைக் கொட்டுவதற்காக லாரியை நிறுத்திய ஓட்டுநரை, சார் ஆட்சியர் சிவக்குமார் கையும் களவுமாகப் பிடித்தார்.
சார் ஆட்சியர் நடவடிக்கை
விதிகளை மீறி மனிதக் கழிவுகளைக் கொட்ட வந்த லாரி உரிமையாளர், ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கவும், நோய்த்தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் சார் ஆட்சியர் சிவக்குமார் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கடலோர, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை