திண்டுக்கல்: பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 16 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தொடர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.
இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. கோயிலில் கோபுரங்கள் மற்றும் சேதம் அடைந்த கோபுரங்கள், சிலைகள், பதுமைகள் ஆகியவை சீரமைக்கும் பணி நடந்துவந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9:30 மணிக்குள் நடைபெறும் என்று கோயில் அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறங்காவலர் குழு தரப்பில், ”கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி அன்று புதன்கிழமை பூர்வாங்க பூஜைகள், கணபதி பூஜை மற்றும் 8 கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்க உள்ளது.
அதன்பின் மலைக்கோயிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ஆம் தேதி கும்பாபிஷேகமும், பழனி கோயில் மூலவர் மற்றும் தங்க விமானம் ஆகியவற்றிற்கு ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கும்பாபிஷேகமும் நடைபெறும். கும்பாபிஷேகப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. கோயில் கும்பாபிஷேகத்தின் போது குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கும்பாபிஷேகம் நிறைவடைந்து மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையை தொடர்ந்து தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குதிரை சித்ரவதை?; வைரலாகும் வீடியோ