திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் திமுக அதிமுகவினர் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் காந்தி நகரைச் சேர்ந்த 5ஆவது வார்டுக்கு ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கிறிஸ்துவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில் இன்று காலை 7 மணிமுதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது. மாலை 4.30 மணியளவில் காந்திநகர் பகுதியிலிருந்து ரயில்வே கேட்டை தாண்டி வாக்களிக்க ஆட்டோவில் வந்தவர்களிடம், திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த நாற்காலியில் இருந்துகொண்டு வணக்கம் செய்துள்ளார்.
இதைப் பார்த்த அதிமுகவினர் கோபம் கொண்டு அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் முருகன், அவரது மகன் அங்கமுத்து விஜயகுமார், கல்யாண பிரபு, நந்தா, மணிகண்டன், செந்தில், மாரிமுத்து, புவனேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த சரவணன், காளிமுத்து, கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ரஞ்சித், சுலைமான், பழனிச்சாமி ஆகியோர் ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவ்வேளையில் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி முன்பே திமுகவினர் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக வேட்பாளருமான சக்கரபாணி கிறிஸ்தவ தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களைப் பார்த்துவிட்டு, அதன்பின் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்று முற்றுகையிட்டார்.
தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்யக்கோரியும், அவ்வாறு செய்யாவிட்டால் இங்கிருந்து செல்லப் போவதில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.