ஊரடங்கால் கரகாட்டம், பறை, நாடகம் எனத் திருவிழாக்களை நம்பியுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட நாட்டுபுறக் கலைஞர்களும் 60 நாள்களுக்கும் மேலாக சிரமப்பட்டு வருவதால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு மாதத்திற்கு 40 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பறை இசைக் கலைஞர் பாண்டியன், "எப்போதும் சுபநிகழ்ச்சிகள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகமாகயிருக்கும். இந்த மாதங்களில் தான் கோயில் திருவிழா, திருமணம் எனத் தொடர்ந்து விழாக்கள் இருக்கும். இதனை நம்பியே எங்களது ஆண்டு வருமானமும் இருந்தது. ஆனால் இம்முறை கரோனா பெருந்தொற்று பாதிப்பால் வருமானம் ஏதுமின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளோம்.
ஒவ்வொரு கலைஞர்களின் குடும்பத்திலும் 6 பேருக்கு குறையாமல் உள்ளனர். எங்களுக்கு அரசு தரும் 20 கிலோ அரிசி போதுமானதாக இல்லை. எங்களது ஏழ்மை நிலையைப் புரிந்து கொண்டு, அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். குறிப்பாக நலவாரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்கள் திண்டுக்கல் பகுதியில் அதிகமாக உள்ளனர். அதனால் அவர்களையும் கருத்தில் கொண்டு, அனைத்து கலைஞர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'நாடகம் நடிச்சி ரொம்ப நாளாச்சு...' - வாய்ப்பின்றித் தவிக்கும் கலைஞர்கள்