திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அமீனம்மா. இவர் வேடசந்தூர் தெற்குத்தெரு பகுதியில் தனது மகனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் இவரிடம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அஸ்ரஃப் என்பவர் வீட்டை காலி செய்யும்படி கூறி மூதாட்டியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தனது சுருக்குப் பையில் உள்ள சிறிய டப்பாவில் மண்ணெண்ணெய் எடுத்துக்கொண்டு மனு அளிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். மண்ணெண்ணெய்யுடன் சென்ற மூதாட்டி ஆட்சியரிடம் மனு அளித்தபோது தனது கையில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார். அப்போது, வெளியே நின்ற காவலர்கள் மூதாட்டியை அழைத்துச் சென்றனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மூதாட்டி கூறியதாவது, "கட்டிய வீட்டை காலி செய்யும்படி என்னிடம் அடிக்கடி தகராறு செய்கின்றனர். இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தொடர்ந்து அவர்கள் என்னை துன்புறுத்துகின்றனர். என்னால் இதெல்லாம் தாங்க முடியவில்லை. அதனால்தான் இன்று என் மகளை ஊரிலிருந்து வரும்படி கூறி அவருடன் இங்கு வந்தேன்" என கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈ.பி.எஃப். ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 பிடித்தம் செய்க' - தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்