தமிழ்நாட்டில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக நாணயங்கள், பல்வகைப் பொருட்கள் கிடைத்துள்ளன. இனிவரும் காலங்களில் நமது இளைய தலைமுறையினருக்கு நாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நாணயங்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமது வரலாறு சொல்லும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள 'முஜிப் பிரியாணி' கடையில் அதிரடி ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டது.
பழைய ஐந்து பைசா நாணயத்தை கொண்டுவரும் நபர்களுக்கு 1/2 பிளேட் கோழி பிரியாணி வழங்கப்படும் என்று அக்கடையின் உரிமையாளர் முஜிபுர் ரகுமான் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். குறிப்பாக முதலில் வரக்கூடிய 100 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காலை முதலே கடை முன்பு பழைய ஐந்து பைசாவுடன் ஏராளமான பொதுமக்கள் குவியத் தொடங்கினர். 12 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் 10 மணி முதல் கூட்டமாக நின்ற மக்களில் முதல் 100 பேர் பழைய ஐந்து பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணி பொட்டலத்தை வாங்கிச் சென்றனர். மேலும், ஐந்து பைசா கொண்டு வந்த நபரின் பெயர் மற்றும் அவரது தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டனர்
இதுகுறித்து 'முஜிப் பிரியாணி' கடையின் உரிமையாளர் முஜிபுர் ரகுமான் கூறுகையில், பழமையான பொருட்களின் நினைவுகளை மற்றோருக்கு பகிர வேண்டும், இந்த அறிவிப்பின் நோக்கமே, செல்லாத நாணையங்களை பலர் வைத்திருப்பதன் மூலம் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்பட்டது.
புழக்கத்தில் இல்லாத 5 பைசா நாணயத்தை பலரும் வைத்திருந்தது மகிழ்ச்சியை தருகிறது. இந்த முதல் கட்ட முயற்சி மன திருப்தியை தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.