திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணியின் மேற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைதைக் கண்டித்து அந்த அமைப்பின் மாநில தலைவர் சிவசுப்ரமணியம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, " கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை காவல் துறையில் உள்ள நாத்திக, நக்சலைட் எண்ணம் கொண்ட சில காவலர்கள் சீர்குலைக்க முயன்றனர்.
அதுபோல எண்ணம் கொண்ட ஒட்டன்சத்திரம் காவல் துறை ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் எங்கள் மாவட்ட பொறுப்பாளர் மீது பொய்யான வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். சரியான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் நடவடிக்கை எடுத்த காவல் துறை அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இந்த கைதைக் கண்டித்து வருகின்ற ஞாயிறன்று போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும், திண்டுக்கல் நகரில் கஞ்சா,லாட்டரி போன்ற சட்டவிரோத செயல்கள் காவல் துறையினரின் உதவியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. இது கண்டிக்கத்தக்கது" என்றார்.