திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள சாமிநாதபுரத்தில் நிலையான கூர்ந்தாய்வு அலுவலர் சக்திவேல் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பழனியிலிருந்து கோவையில் உள்ள தனியார் வங்கி இருப்புப் பெட்டகத்திற்கு பணம் கொண்டுசென்ற வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி 80 லட்சம் ரூபாய் கொண்டுசென்றது தெரியவந்தது.
உடனடியாக வாகனத்தைப் பறிமுதல்செய்த பறக்கும் படையினர் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்பு பணம் கருவூலகத்தில் வைக்கப்பட்டது.