திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எத்திலோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் இளமையிலே தனது தாயை இழந்த நிலையில் தன் மாற்றுத்திறனாளி தந்தையின் உதவியால், திண்டுக்கல்-செம்பட்டி சாலையிலுள்ள (ஜெய்னி) தனியார் நர்சிங் கல்லூரியில் 2014-18ஆம் கல்வியாண்டில் பி.எஸ்சி. செவிலி படிப்பு பயின்றார்.
இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்துவந்த அவர், தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் நாளை (ஜூன் 18) திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடைபெறவுள்ள ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணிக்கான நேர்காணலில் கலந்துகொள்ள திட்டமிட்டார்.
அதற்கான அழைப்பும் வந்த நிலையில் அவர் பயிலும் கல்லூரி நிர்வாகத்திடமுள்ள சான்றிதழ்களைப் பெறுவதற்காக கடந்த ஒருவார காலமாக தன் மாற்றுத்திறனாளி தந்தையுடன் அழைந்துள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் 40 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொன்னதாகவும், பணத்தைக் கொடுத்தாலும் சான்றிதழ்களைத் தர முடியாது எனவும் கூறுவதாக மாணவி குற்றஞ்சாட்டுகிறார்.
அனைத்துச் சான்றிதழ்களும் நாளை அரசு செவிலியர் பணிக்கான நேர்காணலுக்குத் தேவை என்பதால், அம்மாணவி கல்லூரி வாசலில் குடும்பத்துடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுவருகிறார்.
இது குறித்து மாணவி ஜெயசுதா கூறுகையில், “கல்லூரி நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவிதமான அழைப்பு கடிதமும், பணம் கட்ட வேண்டியதற்கான அழைப்புக் கடிதமும் அனுப்பவில்லை. தான் பட்டியலின இட ஒதுக்கீட்டில் படித்ததால் அரசின் அனைத்துச் சலுகைகளையும் நிர்வாகமே எடுத்துக் கொண்டது. அதற்கான எந்த ரசீதுகளும் எனக்குத் தரவில்லை.
கடந்த வாரம்கூட நிர்வாகம் கூறிய 40 ஆயிரம் ரூபாயை, எனது அண்ணனின் கல்விச்சான்றுகளை அடகுவைத்து பணத்தை தயார் செய்து இன்று (ஜூன் 17) கொண்டுவந்தோம். ஆனால், நிர்வாகம் தற்போதைய நிலையை மாற்றி 70 ஆயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே அனைத்துக் கல்விச்சான்றிதழ்களும் தர முடியுமெனக் கூறுகிறார்கள்.
இதனால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தற்காலிக செவிலியர் பணிக்கான நேர்காணலில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பத்துடன் இக்கல்லூரி வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். இப்போராட்டம் நாளையும் தொடரும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இது சம்பந்தமாக 2019ஆம் ஆண்டே இம்மாணவி இக்கல்லூரி அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டிய பணத்திற்கு ரசீது தரவில்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செம்பட்டி காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவி, அவரது தந்தையுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை மருத்துவ மாணவர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்