திண்டுக்கல்: உக்ரைன்-ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில், உக்ரைனில் வசிக்கும் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை ஒன்றிய அரசு, மாநில அரசு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற கொடைக்கானலைச் சேர்ந்த மாணவி வீடு திரும்பியுள்ளார். இவரைக் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி வியாணி, "நான் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தங்கி ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தேன். கீவ்வில் போர் தொடங்கியதும் பதுங்கு குழியில் தங்கியிருந்தோம். 1 வாரத்திற்கும் மேலாக பதுங்கு குழியில் தான் இருந்தோம். எங்களை மீட்க உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் முறையாகப் பதில் அளிக்கவில்லை. நீங்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினர். இந்தியத் தூதரகமும் எங்களுக்கு உதவவில்லை.
ரயில் நிலையத்தில் 50,000 மாணவர்கள்
நாங்கள் 17 பேர் குழுவாக வெளியேறி எந்தவிதப் பாதுகாப்புமின்றி கீவ் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரம் நடந்தே ரயில் நிலையம் சென்றோம். ரயில் நிலையத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் காத்திருந்தனர்.
பெரும் சிரமத்திற்குப்பின் ஸ்லோவோக்கியா எல்லைக்குச் சென்றோம். ஐந்து நாட்கள் அங்கு காத்திருந்த பின், விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து தமிழ்நாடு வந்தோம்" என்றார்.
மேலும், ''எங்களை பத்திரமாக மீட்ட ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசுக்கு நன்றி
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச்சென்ற மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்கீவ், சுமி பகுதியிலும் சிக்கித்தவிக்கும் மாணவர்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும்'' எனவும் வியாணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நன்றி மறவா தமிழன்; உணவின்றித்தவிப்பவர்களுக்கு உதவ ரூ.25,000 நிதி வழங்கிய நாடு திரும்பிய மாணவர்!