திண்டுக்கல்: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு நேற்று நள்ளிரவோடு முடிவடைந்து, 2024 புத்தாண்டு பிறந்தது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. இந்த நிலையில், புத்தாண்டைக் கொண்டாட மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து உள்ளனர்.
கொடைக்கானலில் இயற்கையின் அழகை ரசித்து புத்தாண்டைக் கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகள், கொடைக்கானலுக்கு பேர் போன ஹோம் மேட் சாக்லேட்களையும் ருசித்து, இனிப்பாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ஹோம் மேட் சாக்லேட் விற்பனையாளர்கள், தங்களை நம்பி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தி உள்ளனர்.
இதற்காகப் பிரத்தியேகமாக ஹேம் மேட் சாக்லேட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பாதாம், பிஸ்தா, ரோஸ்டட் சாக்லேட், நட்ஸ் மிக்சிங், ஜெல்லி போன்ற பொருட்களை வைத்து புது புது வண்ணமயமான ஹோம் மேட் சாக்லேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம்.. குற்றால அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
இதில், பிரௌனி வித் சாக்லேட் (Browny With Chocolate) என்ற புது விதமான சாக்லேட் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானலில் சுமார் 50க்கும் மேற்பட்ட சாக்லேட் வகைகள் உள்ளன. இதில், எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகளும் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்த வகையான சாக்லேட்களை தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புத்தாண்டு அன்பளிப்பாக வழங்குவதற்காக அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த கொடைக்கானல் ஹோம் மேட் சாக்லேட் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடப் புத்தாண்டைக் கொண்டாடக் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஹோம் மேட் சாக்லேட் உடன் தங்களது புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் முதன்முறையாக 3D கிறிஸ்துமஸ் குடில்..! இயேசு பிறந்த பெத்தலகேம் கிராமத்தை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்த பட்டதாரி இளைஞர்!