திண்டுக்கல்லில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மழையின் காரணமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலைய கட்டடத்தில் உள்ள விரிசல்களில் தண்ணீர் புகுந்து அருவி போல கொட்டுகிறது.
இந்தபேருந்து நிலையத்தின் கட்டுமானம் ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வந்தாலும் இன்னும் முடிவடையாமல் அரைகுறையாக நிற்கிறது. குறிப்பாக தரமாக கட்டப்படாத சுவர்களால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் வழிகிறது.
இதனால் ஒதுங்க இடமில்லாமல் மக்கள் மழையில் நனைந்தபடி நிற்கின்றனர். இதே போல கட்டடத்தின் பல இடங்களில் விரிசல்கள் உள்ளன. இதனால் பேருந்து நிலையத்தின் உறுதி தன்மையில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தின் புதிய கட்டடத்தை தரமாக கட்ட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் இதே பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அப்போது அருகே யாரும் இல்லாததால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.