திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மனைவியும், குறமகளுமான வள்ளிக்கு முறையான வழிபாடு நடத்தப்படவேண்டும் எனவும், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் எனவும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் பேசுகையில், "தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஏறத்தாழ 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறவர் சமுதாயத்தினர் வசித்துவருகிறோம். மலையும் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த நாங்கள் தற்போது பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் வீற்றிருக்கும் குறமகள் வள்ளிக்கு எங்களுடைய தாய்வழி மரபுப்படி சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். தாய்வழி சீதனமாக தேன், தினை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட சீர்வரிசைகள் செய்வதற்கும் சிறப்பு பூஜை நடத்துவதற்கும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட பல விழாக்காலங்களில் வள்ளியை எங்கள் சமுதாய மக்கள் வழிபாடு செய்வதற்கு சிறப்பு அனுமதியும் முன்னுரிமையும் அளிக்க வேண்டும்.
மேலும் வள்ளிக்கு பழனி கோயிலில் சிறப்பு வழிபாடு என்பது இல்லை. இது மிகவும் தவறானது. கடவுளிடையே பாகுபாடு இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வது. அதேபோல பழனியில் குடமுழுக்கு விரைவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் கடவுளான முருகனுக்கு குடமுழுக்கு தமிழ் மொழியிலேயே நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 180 டன் எடை: ஒரே கல்லால் ஆன முருகன் சிலை